பெரம்பலூர்.ஜன.06. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்ற புகழுக்கும் பெருமைக்கும் உரிய நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 31.12.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் குறள் வாரம் கொண்டாடப்படும் என அறிவித்தார்.

அதனடிப்படையில் திருக்குறளின் பெருமையை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் வகையில் குறளாசிரியர் மாநாடு, திருக்குறள் நாட்டிய நாடகம், திருக்குறள் இசை நிகழ்ச்சி, திருக்குறள் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்திடுமாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு திருக்குறள் சார்ந்த ஓவியப் போட்டி/குறள் ஒப்பித்தல் போட்டிகளும்,
அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள்; கல்லூரிப் பேராசிரியர், பணியாளர்கள், வாரியங்கள் மற்றும் கழகங்களில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு குறள் வினாடி வினா நிகழ்ச்சிகள் “குறள் வார விழா” நிகழ்ச்சிகளாக நடைபெறவுள்ளன.

திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் குறள் வார விழாவின் ஒருநிகழ்வாக 21.01.2026 அன்று திருப்பூர், அரசு மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர்கள்,  அரசு அலுவலர்கள் பங்கேற்கும் குறளாசிரியர் மாநாடு மற்றும் குறள் வினாடி – வினா போட்டி நடைபெறவுள்ளன. 

குறள் வார விழாவின் ஒரு நிகழ்வான குறளாசிரியர் மாநாடு (ம) குறள் வினாடி– வினாப் போட்டியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள்/ பணியாளர்கள், கழகங்கள், வாரியங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் நிலை எழுத்துத் தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 09.01.2026 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் தேர்வு தொடங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு வருகை தர வேண்டும்.

அத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும் 30  நபர்களில் முதல் 9 நபர்கள்  3 பேர் கொண்ட மூன்று குழுக்களாக குறள் வினாடி- வினாப் போட்டியிலும், ஏனைய 21  பேர் குறள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப் பெறுவர்.

அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் போட்டிகளுக்கான நெறிமுறைகள் மற்றும் பாடத் திட்டங்கள் சுற்றறிக்கையாக அனுப்பப்பெற்றுள்ளன. பணியாளர்கள் தங்கள் துறைத் தலைவர்கள் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தேர்வு நாளன்று நேரடியாக தேர்வு மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம், அல்லது https:forms.gle/BseMpWyLPkMRzdHk9 என்ற கூகுள் படிவத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ளும் குறள் சார்ந்த ஓவியப் போட்டி மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக 10.01.2026 – அன்று முற்பகல் 10.30 மணி முதல் 12.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

ஓவியப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஓவியம் வரைவதற்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் உடன் கொண்டு வர வேண்டும். ஓவியப் போட்டிக்கான நேரம் 1 மணிநேரம் ஆகும்.

குறள் ஒப்பிவித்தல் போட்டிக்கான விதிமுறைகள் போட்டித் தொடங்குவதற்கு முன் அறிவிக்கப்படும்.
கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது
குறள் வார விழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் தாட்கோ மேலாளர் க.கவியரசு, அவர்களை
94450 29470 எஅற எண்ணிலும்,
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சி.சுகன்யா அவர்களை 99437 22488 என்ற அலைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *