உத்தமபாளையத்தில் அழிவின் விளிம்பில் திரிகுணகிரி சமண மலை – காக்கப்பட வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷம் எம் எல் ஏ ஆய்வு


தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள திரிகுணகிரி சமண மலை, சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். தமிழகத்தில் சமண சமயம் செழித்து வளர்ந்த காலத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இந்த மலை விளங்குகிறது. கல்வி, மருத்துவம், அன்னதானம், அறிவுத்தானம் போன்ற சமூகப் பணிகளை சமணத் துறவிகள் மக்களுக்காக வழங்கிய முக்கிய மையமாகவும் இது திகழ்ந்துள்ளது.


திரிகுணகிரி மலையில் மகாவீரர், பார்சுவநாதர் உள்ளிட்ட சமண முனிவர்களின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும், பாண்டிய மன்னர்கள் இந்த சமணப் பள்ளிக்கு வழங்கிய நன்கொடைகள் மற்றும் ஆதரவுகளைப் பதிவு செய்துள்ள கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. இவை அனைத்தும் தமிழர்களின் பண்பாடு, சமய வரலாறு மற்றும் தொன்மை நாகரிகத்தை எடுத்துரைக்கும் அரிய சான்றுகளாக உள்ளன.


ஆனால் இத்தகைய வரலாற்றுப் பெருமை மிக்க இடம் போதிய பராமரிப்பின்றி அழிவின் விளிம்பில் உள்ளது என்பது வேதனைக்குரிய உண்மையாகும். மலையின் பல பகுதிகளில் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. சில இடங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் தொன்மையான சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இந்த சூழ்நிலையை நேரில் ஆய்வு செய்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, திரிகுணகிரி சமண மலையின் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, இதனைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும். மேலும், இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது பாரம்பரியம், பண்பாடு மற்றும் வரலாற்றை அறிந்து கொள்ள இதுபோன்ற தொன்மைச் சின்னங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.


வரலாற்றுச் சின்னங்கள் என்பது வெறும் கற்களும் சிற்பங்களும் அல்ல; அவை நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையையும், அறிவையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உயிருள்ள ஆவணங்களாகும். எனவே திரிகுணகிரி சமண மலையை சுற்றுலா மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு மையமாக மேம்படுத்த அரசு, தொல்லியல் துறை, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும்.


நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற இந்த அரிய பாரம்பரியச் செல்வத்தை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். திரிகுணகிரி சமண மலை மீண்டும் அதன் பழைய பெருமையை அடைந்து, வரலாற்றை அறியும் கல்வி மையமாகவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாரம்பரியத் தலமாகவும் உருவாக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும் இந்த ஆய்வில் நேதாஜி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சோ பஞ்சு ராஜா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *