புதியதாகப் பொறுப்பேற்ற தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, போதைப்பொருள் இல்லாத தென் மண்டலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
காவல் துறை தென் மண்டல ஐஜியாக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா, கூடுதல் டி.ஜி.பி. யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக தென் மண்டல ஐ.ஜியாக விஜயேந்திர பிதாரி நியமிக்கப் பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தென் மண்டலத்தில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாத்து, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் படும். நிலுவை வழக்குகளில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்படும். கஞ்சா, போதைப்பொருள் இல்லாத தென் மண்டலம் என மாற்ற நடவடிக்கை எடுப்போம். அதிக வழக்குகள் பதிவாகும் காவல் நிலையத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படும்.
கந்துவட்டி, போதைப் பொருள் விற்பனை, மணல் கொள்ளையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
சைபர் கிரைம், பொருளாதார மோசடி புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை மீறும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா வழக்குகளில் கைதாகும் நபர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என கூறினார்.