பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான  நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தொடங்கி வைத்து, பள்ளியில் பயிலும் 298 மாணவ, மாணவிகளுக்கும் குழந்தை திருமண தடைச் சட்டம் 2006, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 மற்றும் (Drug Free TN) செயலி பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கையேடுகளை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும்  பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிக அளவில் நடைபெற்ற கிராமங்களில் உள்ள 57 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே குழந்தை திருமண தடைச் சட்டம் 2006, குழந்தைகளுக்கான உதவி எண் 1098 மற்றும் (Drug Free TN) செயலி பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கையேடுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் முதற்கட்டமாக கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 298 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கையேடுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காக  எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். எந்த ஒரு காரணத்திற்காகவும் மாணவ மாணவிகளின் கல்வி தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டம், இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் போன்ற எண்ணிட்ட திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள்.

கல்வி ஒன்று தான் சமுதாயத்தில் நம்மை சிறந்தவர்களாக உருவாக்கும் எனவே அனைவரும் கட்டாயம் உயர் கல்வி பயில வேண்டும். பெண்களுக்கான திருமண வயது 21  ஆகும். குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

தற்போது மாணவ மாணவிகளாகிய உங்களிடத்திலும் இதுபோன்ற  விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது அவசியமாகிறது எனவே மாணவ மாணவிகள் உங்கள் பகுதியில் யாருக்கேனும் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிய வந்தால் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
 
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜனவரி 2025 முதல் தற்போது வரை 64 குழந்தை திருமணம் பதிவாகியுள்ளது. இதில் 21 குழந்தை திருமணம் தடுக்கப்பட்டுள்ளது. 43 குழந்தை திருமணத்திற்கும் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.  

குழந்தைத் திருமணம் நடப்பது தெரிந்தால் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சட்டத்திற்குட்பட்டு தண்டனை வழங்கப்படும். எனவே மாணவர்களாகிய நீங்கள் தங்களது பெற்றோர்களிடம் இதுகுறித்து எடுத்துக் கூற வேண்டும். போதைப் பொருட்களில்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருட்கள் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.


 எனவே, மாணவர்கள் அனைவரும் படிப்பதில் முழு கவனம் செலுத்தி தங்களது வாழ்வில் முன்னேற வேண்டும். தங்களது பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயஸ்ரீ, கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *