கோவை கேபிஆர் கலைஅறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பல்துறை ஆராய்ச்சி மாநாடு- INOVATE’2 கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கீதா தலைமையுரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து கல்லூரியின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையப் புல முதன்மையர் முனைவர். யுவராஜ் சிவலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வுக்கான நோக்கவுரையை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துறையின் தலைவர் முனைவர் ஸ்ரீ கலா வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகம் மேலாண்மையியல் துறைப்பேராசிரியர் முனைவர் தாமரைச் செல்வன் நடராஜன் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆராய்ச்சி மாநாட்டினைத் தொடங்கி வைத்து பேராசிரியர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் தன்னை ஆராய்ச்சியில் எவ்வாறு மேம்படுத்திக் கொள்வது தரமான ஆய்வுத் தரவுகளைத் தருதல் ஆராய்ச்சியை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லுதல் குறித்தும் எதிர்கால ஆய்வுக்களங்கள் பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.
அவரைத் தொடர்ந்து பாலக்காடு இந்திய தொழில்நுட்பக் கழகம் இணை கல்விப்புல முதன்மையர் முனைவர் ரஞ்சன் சரங்கி மாநாட்டு மலரினை வெளியிட்டு ஆராய்ச்சி என்பது சமூகப் பயன்நிறைந்தாகவும் புதிய அணுகுமுறைகளை வெளிக்காட்டுவதாகவும் பல்துறை சார்ந்த ஆய்வு மேம்பாட்டினை அடைய வழிவகை செய்வதாக அமைதல் வேண்டும் என்று கூறிச் சிறப்புறை ஆற்றினார்.
மாநாட்டு அமர்வில் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுச்சுருக்கம் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் புல முதன்மையர்கள், பேராசிரியர்கள், 90 – கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.