கோவை, குனியமுத்தூர்:
இந்தியத் திரையுலகின் இரு பெரும் துருவங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணியைக் கொண்டாடும் விதமாகவும், படத்தின் டிரைலர் வெளியீட்டை வரவேற்கும் விதமாகவும் கோவையைச் சேர்ந்த பிரபல குறுஞ்சிற்பக் கலைஞர் குனியமுத்தூர் UMT ராஜா ஒரு பிரம்மாண்டமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார்.
மொத்தம் 777 தீக்குச்சிகளை ஒவ்வொன்றாக நுணுக்கமாக அடுக்கி, ஒரு விசித்திரமான தீக்குச்சி சிற்பமாக இதனை அவர் வடிவமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் உலகத் தமிழ் சினிமாவையே வெல்லும் என்ற உயரிய நோக்கத்தோடும், “டபுள் சவுண்ட் பட்டாசு” போல இந்தப் படம் அமையும் என்ற நம்பிக்கையிலும் இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலைஞர் UMT ராஜா கூறுகையில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் செய்தி கேட்டதுமே ஒரு ரசிகனாக தமக்கு பெரும் உற்சாகம் பிறந்ததாகவும், அந்த மகிழ்ச்சியைப் பறைசாற்றும் விதமாகவே இந்த 777 தீக்குச்சி சிற்பத்தை இரவு பகலாக உழைத்து உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தத் தீக்குச்சி சிற்பம், கமல் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.