காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயம் அருகே நடந்த 2 சாலை விபத்துகளில் 2 முதியவர்கள் உயிரிழப்பு.
காங்கயம் அருகே திங்கள்கிழமை நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 முதியவர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
விபத்து 1: ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி (65). இவர் திங்கள்கிழமை காலை 8 மணியளவில் நத்தக்காடையூரில் இருந்து காங்கயம் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, நாட்டார்பாளையம் பகுதி அருகே வந்தபோது, குமாரசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதி, விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் குமாரசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காங்கயம் போலீஸார் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து 2: காங்கயம் தாலுகா நத்தக்காடையூர் அருகே உள்ள சுந்தராபுரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு (65). இவர் தனது இருசக்கர வாகனத்தில் நத்தக்காடையூரில் இருந்து காங்கயம் நோக்கி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார், எதிர்பாராதவிதமாக தங்கராசு ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி, விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தங்கராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த நத்தக்காடையூர் அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொடாரன் (80) என்பவர் காயமடைந்தார். அவருக்கு காங்கயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் கூடுதல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்து வந்த காங்கயம் போலீஸார், தங்கராசுவின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேற்கண்ட 2 விபத்துகள் குறித்து காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.