தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் பயங்கரம் ரவுடி கும்பலால் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டி படுகொலை
பள்ளி தாளாளர் உட்பட 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.

திருப்பூர்,
தாரபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி அருகே வழக்கறிஞர் முருகானந்தம் என்பவர் ஓட ஓட ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த லிங்கசாமி என்பவரது மகன் முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இவர் நேற்று பஸ்நிலையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்று கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை எடுத்து முருகானந்தத்தை தாக்க தொடங்கி உள்ளனர்.

அப்போது உயிருக்கு பயந்த முருகானந்தம் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
விடாது துரத்திய ரவுடி கும்பல் முருகானந்தனை பள்ளி அருகிலேயே சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அதில் தலை,கை,மார்பு உட்பட பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த முருகானந்தம் துடி துடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.உடனே ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.


கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக, போலீசருக்கு போன் செய்து தன்னை ரவுடி கும்பல் கொலை செய்ய துரத்தி வருவதாக முருகானந்தம் தெரிவித்துள்ளார். இருப்பினும் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்லும் முன்பு அவர் ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து அங்கு வந்த தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் முருகானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தை சுற்றிலும் ரிப்பன் கட்டி போலீசார் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். . மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது, சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த பஸ்சில் ஏறியது. அதனை பின்தொடர்ந்து போலீசார் சென்றனர்.

அப்போது பஸ்சுக்குள், முருகானந்ததை வெட்டுவதற்கு பயன்படுத்திய அரிவாள் ஒன்று ரத்தக்கரையுடன் கிடந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அமராவதி சிலை வரை ஓடிய மோப்பநாய், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் சம்பவ இடத்தில் கிடந்த 2 செல் போன்களை போலீசார் கைப்பற்றினர். பட்டப்பகலில் அரங்கேறிய இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதனையடுத்து முருகானந்தம் கொலை வழக்கு தொடர்பாக தனியார் பள்ளியின் தாளாளர் தண்டபாணி மற்றும் திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த தட்சிணா மூர்த்தி (29), சேலம் பேலுர் பகுதியை சேர்ந்த ராம் (22), நாமக்கல் பகுதியை சேர்ந்த சுந்தரன் (26)திருச்சி பகுதியை சேர்ந்த நாகராஜன் (29), தாராபுரம் வினோபா நகர் நாட்டுதுரை (65) ஆகிய 6 பேர், தாராபுரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:-கொலை செய்யப்பட்ட வக்கீல் முருகானந்தத்தின் தந்தை லிங்கசாமிக்கும், அவரது தம்பியான தண்டபாணிக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.இதுதொடர்பாக லிங்கசாமி, தனது சொத்தை அபகரித்து கொண்டதாக தண்டபாணி மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, காங்கயம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்காக, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கோர்ட்டுக்கு வந்த லிங்கசாமி படுகொலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில் தனது தந்தையின் கொலைக்கு காரணமானவர் களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்று தருவேன் என கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே முருகானந்தம் சபதம் செய்தார். இதற்காகவே அவர் வக்கீலுக்கு படித்தார். அதன்பின்னர் சென்னை ஐகோர்ட்டில் முருகானந்தம் வக்கீல் தொழில் செய்து வந்தார்.

தண்டபாணிக்கு சொந்தமான தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விதிமுறைகளுக்கு புறம்பாக 4 மாடிகள் கட்டப்பட்ட தாகவும், சட்டப்படி 3 மாடிகளுக்கு மேல் கட்டக்கூடாது என்றும், சென்னை ஐகோர்ட்டில் முருகானந்தம் வழக்கு தொடர்ந்தார்.

ஐகோர்ட்டு உத்தரவுப்படி தனியார் பள்ளியின் கூடுதல் கட்டிடமான 4-வது மாடி, கடந்த மாதம் இடிக்கப்பட்டு விட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதமும், பழிக்குபழி வாங்கும் எண்ணமும் இரு தரப்பிலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
இந்தநிலையில் தண்டபாணி நிர்வகித்து வந்த தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மையை சோதனை செய்ய நேற்று வந்தபோதுதான் முருகானந்தம் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் தென்னரசு தலைமையில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.அப்போது தாராபுரம் நகரைச் சார்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அவரின் அகால மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது


முருகானந்தத்தை படுகொலை செய்த உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து தாராபுரம் வழக்கறிஞர்கள் இன்று (செவ்வாய் கிழமை) நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற இக்கூட்டம் அரசை கேட்டுக்கொள்கிறது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பள்ளித்தாளாளர் தனது சொந்த அண்ணன் மகனை கூலிப்படையை வைத்து பள்ளி அருகிலேயே வெட்டி கொலை செய்த சம்பவம் தாராபுரத்தில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள்,மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *