C K RAJAN
Cuddalore District Reporter
9488471235
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அன்னை சத்திய குழந்தைகள் சேவை இல்லம் மற்றும் சமூக நீதி மாணவர் விடுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் சமூக நீதி மாணவர் விடுதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கீழ் இயங்கும் அன்னை சத்திய குழந்தைகள் சேவை இல்லத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,
வெளியூர்களிலிருந்து விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதையும், நல்ல முறையில் கற்றல் மேற்கொள்வதை உறுதிசெய்திடும் வகையில் தொடர்ந்து மாணவர்கள் தங்கும் விடுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மஞ்சக்குப்பம் சமூக நீதி மாணவர் விடுதி, அன்னை சத்திய குழந்தைகள் சேவை இல்ல விடுதிகளில் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, உணவு, இட வசதிகள், தங்கும் அறை வசதி, மின் விளக்கு, மின்விசிறி வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சமையலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் உள்ளதா என்பது குறித்தும், கண்காணிப்பு கேமரா தொடர் பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு தங்கியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம், தினந்தோறும் வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் வருகை மற்றும் விடுமுறை சரிவர பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அன்னை சத்திய குழந்தைகள் சேவை இல்லத்தில் மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்காக சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகள் வழங்கப்பட்டுள்ளதை உறுதிசெய்திடும் விதமாக, மாணவர்கள் கற்ற வித்தைகளை அரங்கேற்றினர்.
விடுதிகளை நாள்தோறும் தூய்மையாக பராமரிப்பதோடு, பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் காவலர்கள். கண்காணிப்பாளர்கள் விடுதியினை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். விடுதிகளில் வழங்கப்படும் குடிநீரின் தரம் எவ்விதத்திலும் பாதிப்பில்லாமல் வழங்கிட வேண்டும். கழிவறைகளில் நாள்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளவும், சமையல்கூடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலர்கள் தொடர்ந்து, சுழற்சி முறையில் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது, கடலூர் வருவாய் வட்டாட்சியர் மகேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா,மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா,மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ.நாகராஜபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.