பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளியின் நூற்றாண்டு விழா, நூற்றாண்டு நினைவு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் கட்டிடங்களை புதுப்பித்த அனன்யா குழுமத்திற்கு பாராட்டு விழா ஆகியவை ஒருங்கிணைந்து நடைபெற்றன.
விழாவிற்கு முதன்மை விருந்தினராக பவன்குமார் ஜி கிரியப்பனவர் கலந்து கொண்டு, ரூ.75 லட்சம் மதிப்பில் அனன்யா செல்டர்ஸ் சமூகப் பொறுப்புணர்வு நிதியில் புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்கள் மற்றும் உணவுக்கூடத்தை திறந்து வைத்து, கல்வி மலர் புத்தகத்தை வெளியிட்டார். சிறப்பு விருந்தினராக சிவகுரு பிரபாகரன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரா. பாலமுரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியரும் மூத்த மாணவருமான பொ. ராமலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியர் மா. சுகுணா வரவேற்றார். அனன்யா குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் உமா மகேஸ்வரி யுவராஜ் தனது உரையில், “சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள் சிறந்த கல்வி பெற்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காக இந்தப் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இனியும் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக உள்ளோம்” என்றார்.
மேலும் கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துரை வழங்கினர். விழா நிறைவில் ஆசிரியர் எஸ். ஆரோக்கியதாஸ் நன்றி உரையாற்றினார்.
மாலை நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி சிறப்பூட்டியது. விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.