திருவாரூர்., மார்ச்.03
இன்று மாலை 5.30 மணி அளவில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்து வண்டாம்பாளை பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, அரசு பேருந்துக்கு முன்னால் சென்ற ஆட்டோ திடீரென திரும்பியதால், பின்னால் வந்த அரசு பேருந்து ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்களை அழைத்து கொண்டு சென்ற ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் ஆட்டோவில் பயணித்த 6 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து நன்னிலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நாகப்பட்டினம் மண்டலத்திற்குட்பட்ட பல்வேறு அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக யாகம் வளர்த்து பூஜை செய்த நிலையில், தற்போது மீண்டும் பேருந்து விபத்து ஏற்பட்டதால் யாகத்தின் பலன் கிடைக்கவில்லையோ என்ற கேள்வி எழுகிறது.