கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், சென்னை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநருமான டாக்டர் சுதா சேஷய்யன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “மாணவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து, கடமையிலிருந்து பின்வாங்காமல் சவால்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், ஒருவா் நலமுடன் இருப்பது என்பது உடல், மனம், சமுதாயம், ஆன்மீகம் ஆகிய நான்கிலும் நலமுடன் இருப்பதையே குறிக்கும் என்றும், முறையான நேர மேலாண்மை மனஅழுத்தத்தைக் குறைக்கும் என்றும் குறிப்பிட்டார். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பை நாள்தோறும் நினைத்துப் பார்ப்பதுடன், இந்திய மண்ணில் பிறந்ததைப் பெருமையாகக் கருத வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

​கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றிய இவ்விழாவில், கல்லூரி முதல்வா் முனைவா் வே. சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக மாணவா் பேரவைத் தலைவா் செல்வி எஸ். தொம்னிக் லித்வினா வரவேற்புரையாற்றினார்.

விழாவில் ஆய்வுகளில் சிறந்து விளங்கிய பேராசிரியா்களுக்குச் சிறப்பு விருந்தினா் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கா்கள், சிறந்த ஆராய்ச்சித் துறைகளுக்கான சுழற்கோப்பைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய பேராசிரியா்களுக்கான ஊக்கத் தொகைகளை டாக்டர் சி.ஏ. வாசுகி வழங்கினார். இறுதியாக மாணவா் பேரவையின் செயலா் செல்வன் பி. பவன் கிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *