கோவை
செயற்கை நுண்ணறிவின் மூலம் எதிர்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் நுண்ணறிவு அமைப்புகள் பற்றிய மாநாடு 2026.
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் தரவு அறிவியல் புலத்தின் சார்பில் செயற்கை நுண்ணறிவின் மூலம் எதிர்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் நுண்ணறிவு அமைப்புகள் பற்றிய மாநாடு 2026 கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் தரவு அறிவியல் புலத்தின் முதன்மையர் முனைவர் பிரதீபா வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் கீதா தலைமை உரையாற்றினார்.தொழில்நுட்பப் புதுமையின் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் புதுமையான எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தயாராகவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பெங்களூர் மைக்ரோசாப்ட் அபிவிருத்தி வழிகாட்டி கமல் எஸ் உரையில் மாணவர்களின் அன்றாட வாழ்விலும் தொழில்வாழ்க்கையிலும் செயற்கை நுண்ணறிவுக் கல்வி துணையாக அமைகிறது என்பதை விளக்கினார். கோவை டிஜிட்டல் பிரசிடியோ நிறுவனத்தின் விநியோக இயக்குநர் ராம்குமார் குப்புச்சாமி ஆற்றிய சிறப்புரையில் நுண்ணறிவுக் கட்டமைப்புகள் தொழில்துறையில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி எடுத்துரைத்தார்.
மைக்ரோசாப்ட் குறித்த அமர்வில் சென்னை டாடா ஆலோசனை மைய உதவி ஆலோசகர் சரவணன் கணேசன் உரையில் நிறுவனத் தரத்திலான AI முகவர்களை உருவாக்கும் முறைகளைப் பற்றி விளக்கினார். கோவை Trbhi inc நிறுவனத்தின் கணக்குப் பொறுப்பாளர் கார்த்திக் இளங்கோ பேசுகையில் Azure தளத்தின் மூலம் AI தீர்வுகளை வடிவமைத்துச் செயல்படுத்தும் நடைமுறைகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
கூகுள் பற்றிய அமர்வில் சர்வதேசப் பேச்சாளரும், செயற்கை நுண்ணறிவு வடிவமைப்பாளருமான கீதா காக்ராணி உரையாற்றினார். Gemini மற்றும் Vertex Al மூலம் விரைவான செயலி உருவாக்கம் குறித்து விளக்கினார். பெங்களூர், AWS சமூக உருவாக்க நிறுவனத்தின் தீர்வு வல்லுநர் ராகவேந்திரன் நுண்ணறிவு அமைப்புகளின் பயன்பாடு மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்குஎடுத்துரைத்தார். கோவை பெசிலிட்ரான் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த் கெங்காதரன் நுண்ணறிவு அமைப்புகளின் கட்டமைப்பு அடிப்படைகளைப் பற்றி மாணவர்களரிடம் விளக்கினார்.
இன்றைய கல்வி மற்றும் தொழில்துறை சூழலில் மாணவர்கள் உண்மையான உலகத் திட்டங்களில் செயற்கை நுண்ணறிவைத் திறம்பட ஒருங்கிணைக்கும் திறன்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றனர். அந்த நிலையைக் கருத்தில் கொண்டு இம்மாநாடு புதுமைத்திறன் வேலைவாய்ப்புத் தகுதி மற்றும் தொழில்த் தயார்நிலை ஆகியவற்றை மேம்படுத்தத் தேவையான அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்கியது.
நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் தரவு அறிவியல் புலம் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் 700 க்கும் மேற்பட்டமாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.