இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக ஜல்ஜீவன் திட்ட பணிகளுக்காக குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் சார்பில் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வீடுகள் தோறும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட காயாம்பு கோவில் தெரு, எஸ்.வி. நகர் உள்ளிட்ட பெருவாரியான தெருக்களில் தார் சாலையின் நடுப்பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக நீண்ட பள்ளம் தோண்டி வைத்துள்ளனர்.
அவற்றை மீண்டும் முறையாக சமன் செய்யாமல் பெயரளவிற்கு விட்டுச் சென்றதால் ஏராளமானோர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சதுரயுகவல்லி நகரை சேர்ந்த முத்துராஜ் கூறியதாவது. சாயல்குடி பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டுகள் உள்ளன. ஏற்கனவே தெருக்களில் இருந்த தார் சாலையை பெயர்த்தெடுத்து விட்டு அவற்றில் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
இவற்றை முறையாக மூடாமல் தோண்டிவிட்டு அப்படியே போட்டு செல்வதால் மாணவர்கள், முதியவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். குடிநீர் வழங்கக்கூடிய டிராக்டர்கள் பெரும் பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை தொடர்கிறது. எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தற்காலிகமாக தோண்டப்பட்ட சாலையை அப்படியே போட்டு செல்லாமல் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.