திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மருத்துவமனையில், சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் இரா. திருமுருகன் தலைமை தாங்கி முகாமைத் தொடங்கி வைத்தார். தேர்வு கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் சுலோச்சனா சேகர் முன்னிலை வகித்தார்.
இம்முகாமில், பொது மருத்துவர் ஆர். புவனேஸ்வரி, பெண்கள் நல சிறப்பு மருத்துவர் நஸ்ரின் பாத்திமா மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் வசந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு, பெண்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் சிகிச்சை முறைகளையும் வழங்கினர். குறிப்பாக, நீரிழிவு நோய், ரத்தசோகை பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் பொதுவான மகப்பேறு குழந்தைகள் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக மூத்த மருத்துவர்கள் விஷ்ணு பிரியா, பிரேம், திலீபன் ராஜா, விக்னேஷ் மற்றும் கரிஷ்மா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் வந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் முழுமையாகப் பரிசோதித்தனர்
முகாமில் பல்கலைக்கழக ஊழியர்கள் மட்டுமின்றி, பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் திரளாக வந்து கலந்துகொண்டு பயன்பெற்றனர் கிராமப்புற பெண்களிடையே உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்த இந்த முகாம் பெரும் வரவேற்பைப் பெற்றது.