காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.

இங்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு தோட்ட உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு தோட்ட உற்சவம் நடைபெறாமல் இருந்தது. கடந்த ஆண்டு இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு நின்றுபோன உற்சவங்கள் மீண்டும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

வல்லன் எனும் அசுரனை முருகப்பெருமான் அழித்து கோயில் கொண்டமையால் இத்தலம் வல்லக்கோட்டை என்று வழங்கப்படுகிறது. இத்தலத்தில் சத்ரு சம்கார யாகம் செய்து வழிபடுவது பரிகார சிறப்பாகும். வல்லாசுரன் மாண்டு விழுந்த இடத்தில் ஆண்டுதோறும் தோட்ட உற்சவம் நடத்தப்படுகிறது.

இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு கட்டுதல், திருமணம், பதவி உயர்வு, சொந்த வீடுமனை கிடைப்பதால் வந்தாரை வாழ வைக்கும் வல்லக்கோட்டை முருகன் என்ற சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு.

புராண காலத்தில் இராமபிரானின் முன்னோராகிய பகீரத மன்னன், தேவர்களின் தலைவன் இந்திரன், துர்வாச முனிவர், பிருகஸ்பதி, பல்லி சாப விமோசனம் பெற்ற சிருங்கி முனிவரின் சீடர்கள் வந்து வணங்கி அருள்பெற்ற தலமாகவும் இத்திருக்கோயில் விளங்குகின்றது. இங்கு பிரபல சினிமா நடிகர்களும், சின்னத்திரை கலைஞர்களும், அரசியல் பிரமுகர்களும் வந்து வழிபட்டு வளர்ச்சிடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு திங்களன்று நடைபெற்ற தோட்ட உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. பிறகு மூலவருக்கு பால் தயிர் மஞ்சள் விபூதி முதலிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மஞ்சள் சாமந்தி மாலை அலங்காரம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உற்சவர் கோடையாண்டவருக்குப் பால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

பிறகு கோடை ஆண்டவர் மேளதாளங்கள் முழங்க சப்பரத்தில் எழுந்தருளி வல்லாசுரன் விழுந்த தோட்டத்திற்கு நண்பகலில் சென்றடைந்தார்.

இந்த உற்சவத்தை முன்னிட்டு வல்லக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள வல்லாசுர தோட்டம் சுத்தம் செய்யப்பட்டு அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அங்கு மாலை 4 மணிக்கு கோடையாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு சிறப்பு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு பெருமான் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பிறகு கோடையாண்டவர் அங்கிருந்து புறப்பட்டு கரகாட்டம், ஒயிலாட்டம் நடனத்துடன் மேளதாளங்கள் முழங்கிட வல்லக்கோட்டை கிராமத்தில் வீதி உலா வந்தார். வண்ண வாண வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டது.

தோட்ட உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் திரு.சி.குமரதுரை அவர்களின் அறிவுரைப்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன், ஊராட்சி தலைவர் மணிமேகலை தசரதன், துணைத் தலைவர் சிவாஎத்திராஜ், தியாகு மற்றும் உபயதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *