C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..

கடலூர் தண்ணீர் திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

கடலூர், மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு நுகர்வோர் கல்வி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் தண்ணீர் திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் தண்ணீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு அரசு நீருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அதனை எதிர்கால தேவைக்காக சேமித்திடவும், நிலத்தடி நீரினை அதிகரித்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது.நிலத்தடி நீரினை சேமிக்கும் வகையில் ஆறுகள், வாய்க்கால்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு கட்டடங்கள் மற்றும் தனிநபர் கட்டடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, நீரின் முக்கியத்துவத்தை வருங்கால சமூதாயமாக திகழும் மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் தண்ணீர் திருவிழா நிகழ்ச்சி இக்கல்லூரியில் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் மாணவர்களால் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.


நிலத்தடி நீரினை மேம்படுத்துவதற்கு மழைநீர் சேகரிப்பினை உங்கள் வீடுகளிலும் கல்லூரிகளிலும் ஏற்படுத்த முயல வேண்டும். நீங்கள் நினைத்தால் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்க முடியும். உங்கள் வீடுகளிலும் கல்லூரிகளிலும் தினமும் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது,எங்கே வீணாகிறது என்பதைக் கண்காணித்து அதைக் குறைக்கத் திட்டமிட வேண்டும்.

ஒரு சொட்டு நீர் வீணாவதைக் கண்டாலும் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். உங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க இளைஞர் குழுக்களை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். பொறியியல் மற்றும் அறிவியல் மாணவர்கள் குறைந்த நீரில் இயங்கும் பாசன முறைகள், கழிவுநீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துதல் போன்ற எளிய முறைகளில் நீரை சிக்கனமாக உபயோகிக்கக்கூடிய கருவிகளை கண்டறிய வேண்டும். நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுவது நீரின் தரத்தைக் கெடுப்பதுடன், நிலத்தடி நீர் ஊடுருவலையும் தடுப்பதால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

தண்ணீரினை சேமிப்பது நமது அடுத்த தலைமுறைக்கு நாம் தரும் மிகப்பெரிய சொத்து. எனவே, ஒவ்வொரு தனிநபரும் இன்று முதல் ஒரு ‘நீர் பாதுகாவலனாக’ செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், தமிழ்நாடு நுகர்வோர் கல்வி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் அருள்செல்வம், கல்லூரி முதல்வர் அருமைசெல்வம், ஒருங்கிணைப்பாளர் ஷகிர்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *