காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

காங்கயம் அருகே ஒரே நாளில் 3 விபத்து: இருசக்கர வாகன ஓட்டுநர்கள் காயம் – விபத்தைக் குறைப்பதற்கு போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.

காங்கயம் அருகே ஒரே நாளில் 3 விபத்துக்கள் நிகழ்ந்துள்ள நிலையில், விபத்துக்களைக் குறைப்பதற்கு போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கயம் அருகே, வியாழக்கிழமை காலை தாராபுரம் சாலை, அரசுப்பு மேல்நிலைப்பள்ளியை அடுத்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் எதிர் எதிரே வந்த 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 2 பேரும் காயமடைந்தனர். இவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதே போல, மதியம் சுமார் 12 மணியளவில், பழையகோட்டை சாலையில் உள்ள மூலக்கடை பகுதியில் இருசக்கர வாகனமும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயமடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், மதியம் 2 மணியளவில், பழையகோட்டை சாலை, அரசு கலைக் கல்லூரி அருகே ஸ்கூட்டியும், பயணிகள் வேனும் மோதிய விபத்தில், ஸ்கூட்டியில் பயணித்த ஆண், பெண் இருவரும் படுகாயமடைந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுடன் சென்ற குழந்தை காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பியது.

கடந்த 10 தினங்களில் காங்கயம் பகுதியில் மட்டும் சுமார் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களே அதிகம் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். இந்த விபத்துக்களில் உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே அது ஊடகங்களில் செய்தியாகிறது. மற்றபடி, உயிர் தப்பிய விபத்துக்கள் பொதுமக்களின் கவனத்துக்கு வருவதில்லை.

போலீஸாரின் தீவிர நடவடிக்கை தேவை: காங்கயம் நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும், காங்கயம் நகரைக் கடந்து செல்லும் கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலை, பழனி-ஈரோடு, நெடுஞ்சாலை, திருப்பூர் சாலை, சென்னிமலை சாலை பகுதிகளில் சாலையிலே நான்கு சக்கர வாகனங்களை பல மணி நேரம் நிறுத்தி வைத்து, சாலையை பார்க்கிங் பகுதியாகப் பலர் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சென்னிமலை சாலை, மெயின் ரோடு, திருப்பூர் சாலை ஆகிய பகுதிகளில் அதிகளவு வாகனங்களை சாலையில் நிறுத்தி வருகின்றனர்.

சாலையில் கார், கனரக வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதில் தாமதமாகும் நேர இழப்பை ஈடு செய்வதற்காக நகரைக் கடந்து அதிவேகத்தில் செல்லும் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றன.

தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதிக்கும் போலீஸார், நெடுஞ்சாலையை பார்க்கிங் பகுதியாகப் பயன்படுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுத்து, வாகன ஓட்டுநர்கள் விபத்துக்களில் சிக்காமல் பாதுகாப்பதற்கு காங்கயம் போலீஸார் மற்றும் காங்கயம் போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்கயம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *