காங்கயம் மற்றும் திருப்பூர் மாவட்டப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 834 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டப் பணிகளுக்கான ஆணைகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.
காங்கயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கயம், வெள்ளகோவில், குண்டடம் ஆகிய ஒன்றியத்துக்கு உள்பட்ட 85 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.2.97 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டப் பணிகளுக்கான ஆணைகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பங்கேற்று, கனவு இல்ல திட்டப் பணிகளுக்கான பணியாணைகளை வழங்கி, சிறப்புரையாற்றினார்.
இதில் அவிநாசி, தாராபுரம், பல்லடம், மடத்துக்குளம், உடுமலை, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு ஆகிய தாலுகாக்களுக்கு உள்பட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 749 பயனாளிகளுக்கு ரூ.26.21 கோடி மதிப்பீட்டில் என, மொத்தம் 834 பயனாளிகளுக்கு ரூ.29.19 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டப் பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் மனிஷ், ஈரோடு எம்.பி., கே.இ.பிரகாஷ், பொள்ளாச்சி எம்.பி., க.ஈஸ்வரசாமி, திருப்பூர் மாநகர மேயர் ந.தினேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.சங்கமித்திரை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.