தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
பாசன வாய்க்காலில் பெண் சடலம் கண்டெடுப்பு – குண்டடம் போலீசார் விசாரணை.!
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே வேறுவேடம்பளையம் பகுதியில் உள்ள PAP பாசன வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை அந்த பாசன வாய்க்காலின் மூலம் சுமார் 2000 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை அந்த வழித்தடத்தில் சென்ற ஒரு விவசாயி துர்நாற்றம் வீசுவதை கவனித்துள்ளார். இதையடுத்து அருகில் சென்று பார்த்தபோது, சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் வாய்க்காலில் கிடப்பதை கண்டுள்ளார்.
அந்த பெண் கருப்பு நிற மேலாடை அணிந்திருந்ததுடன் கையில் பித்தளை வளையலும் இருந்ததாகவும், நீளமான முடியுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக விவசாயி குண்டடம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த குண்டடம் காவல் ஆய்வாளர் விவேக் மற்றும் துறை அதிகாரி நாகராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடந்த 5 நாட்களுக்கு முன்பே வாய்க்காலில் நீர் நிறுத்தப்பட்டதால், அதன் பின்னர் வெயிலில் சடலம் கிடந்த காரணமாக உடல் சிதைந்த நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் மருத்துவ அதிகாரிகள் உதவியுடன் சடலத்தை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த பெண் யார் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் குண்டடம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.