மூலக்கரை கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக விவசாய சங்கத் தலைவர் சுபாஷ் பண்ணையார் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மூலக்கரை கிராமத்தை சுற்றி சீனிமாவடி குளம், நல்லூர் குளம் மற்றும் நத்தக் குளம் ஆகிய மூன்று குளங்களில் இருந்து வடிகால் மற்றும் பாய்மான வாய்க்கால்கள் அதன் சிறு கிராமங்களுக்கு வரும் நீர் தேங்காமல் சீராக வடிவதற்காக ஆண்டுதோறும் ஒப்படிச் சங்கம் (விவசாய சங்கம்) மற்றும் தனியார் கெமிக்கல் நிறுவனமான D.C.W நிறுவனத்தின் உதவியுடன் சுமார் ரூ.8.5 லட்சம் செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மழைக்காலங்களில் மூலக்கரை கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ள சேதம் ஏற்படாமல் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த சுமார் 100 ஆண்டுகளாக ஒப்படிச் சங்கம் இந்த குளங்கள் மற்றும் வாய்க்கால்களை பராமரித்து வருகிறது.

தற்போது தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி புதிய 4 வழிச்சாலை (NH-32) பணிக்காக மூலக்கரை, அம்மன்புரம் மற்றும் நத்த கிராமங்களில் நிலம் உர்ஜிதம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போதைய வடிகால் பாதையை பாதிக்கும் வகையில் அமைந்தால், மழைக்காலங்களில் பல கிராமங்களும் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் போது கடம்பாக் குளம் உடையாமல் இருந்ததால் தான் சீனிமாவடி குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் பெரும் சேதத்திலிருந்து தப்பியது. எனவே ஏற்கனவே திட்டமிடப்பட்ட பாதைக்கு பதிலாக, கிராம மக்கள் பரிந்துரைக்கும் மாற்றுப் பாதையில் 4 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மூலக்கரை கிராம ஒப்படிச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், அந்த மனுவிற்கு விசாரணை சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் ஆஜராகினர்.

இதனைத் தொடர்ந்து, விவசாய சங்கத் தலைவர் சுபாஷ் பண்ணையார் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, மூலக்கரை கிராமத்தை சுற்றி நான்கு வழிச்சாலை வருவதால் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் பாதித்து அழியும் நிலை உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கும். ஆகவே தேர்தலுக்கு முன்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்பதை தவிர வேறு வழி கிடையாது என்றார். மேலும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் யார் என்றே தெரியாது என்றும் பின்னர் அவரை ஒரு கட்டத்தில் வியாபாரி என்றும் கடுமையாக சாடினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *