பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 5,000 நெல் மூட்டைகள் கொள்முதலுக்காக காத்திருப்பு – மழை பெய்தால் நனைந்துவிடும் அபாயம் – உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தல்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பும் கொள்முதல் நிலையத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் படம் அகற்றப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் கொண்டிகுளம், சாந்தாங்காடு, நடுவிக்கோட்டை, மகாராஜசமுத்திரம், லெட்சத்தோப்பு, வெட்டிக்காடு, பெருமாள்கோயில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்களை கொள்முதலுக்காக கொண்டிகுளம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.

தற்போது கொண்டிகுளம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 4,800 நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்கள் சுமார் 5,000 மூட்டை அளவிற்கு அப்படியே அங்குள்ள நெல் களங்களில் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கொள்முதல் செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல்களை கொண்டு வந்தால் இங்கு சாக்கு இல்லை என்கிறார்கள். இன்று சாக்கு வந்துவிட்டது. ஆனால் லாரி வரவில்லை. இப்போது மழை பெய்தாலும் எங்களுடைய நெல் மணிகள் அனைத்தும் நனைந்துவிடும். நாங்கள் மிகவும் சிரமப்பட்டு அறுவடை செய்த நெல்கள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது, எங்களுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. எனவே அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

அதேபோல் கொண்டிகுளம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் புகைப்படம் அகற்றப்படாமல் இருப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பேட்டி. முத்துக்குமார் – விவசாயி, கொண்டிகுளம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *