தாராபுரம் செய்திகள் பிரபு
செல்:9715328420

குண்டடம் அருகே பெரியகுமாரபாளையம் அருகே வெறிநாய் தொல்லை: ஆடு தாக்கப்பட்ட சம்பவம் – மக்கள் அச்சம்.

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமாரபாளையம் அருகே உள்ள பகுதியில் வெறிநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அப்பகுதியில் வசித்து வரும் தமிழரசி என்பவரின் தோட்டத்தில் நேற்று அதிகாலை சுமார் 6 மணியளவில் சம்பவம் ஒன்று நடைபெற்றது. வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்றிருந்த ஆடுகளை சில நாய்கள் துரத்திச் சென்று தாக்கியுள்ளன. இதில் ஒரு ஆட்டை கடித்து குதறியதுடன், மேலும் ஒரு கிடாயையும் கடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் போது ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் உடனடியாக விரைந்து சென்று நாய்களை விரட்டியுள்ளனர். இதனால் பெரிய சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே வெறிநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட 6 கோழிகளை நாய்கள் கொன்றுவிட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த பிரச்சனையின் முக்கிய காரணமாக கோழிப்பண்ணைகளில் இறந்த கோழிகளை முறையாக அகற்றாமல், சாலையோர குழிகள் மற்றும் குட்டைகளில் கொட்டுவது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வாறு செய்யப்படுவது நாய்களை அந்த பகுதிக்கு ஈர்க்கும் சூழலை உருவாக்குவதாகவும், இதை உடனடியாக கட்டுப்படுத்தினால் இத்தகைய சம்பவங்கள் குறையும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, வெறிநாய்களை கட்டுப்படுத்துவதுடன், சுகாதார முறைகளை கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *