தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிக்காடு, பழைய முதல்சேரி பகுதியைச் சேர்ந்தவர் 74 வயதான அழகிரிசாமி. இவர் அப்பகுதியில் நீண்டகாலமாக ATC டுடோரியல் சென்டர்’ என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தவர். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்விப் புகட்டிய அந்த ஆசிரியர், தனது வாழ்நாளின் இறுதியிலும் சமூகத்திற்குப் பயனுள்ள ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உறுதியாக இருந்தார்.
கல்விப் பணியைத் தனது சுவாசமாகக் கொண்டிருந்த அழகிரிசாமி, தான் மறைந்த பிறகும் தனது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கும், படிப்புக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகத் தனது உடலைத் தானமாக வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கமான முடிவெடுத்திருந்தார். இந்த விருப்பத்தை அவர் தனது உறவினர்களிடமும். நண்பர்களிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததோடு. அதற்கான விழிப்புணர்வையும் அவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்தார்.
இந்நிலையில், முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஆசிரியர் அழகிரிசாமி காலமானார். துயரமான அந்தச் சூழலிலும், அவரது புனிதமான ஆசையை நிறைவேற்ற அவரது குடும்பத்தினர் முன்வந்தது அந்தப் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மறைந்த அழகிரிசாமியின் மனைவி தமிழ்ச்செல்வி, தனது கணவரின் கடைசி விருப்பத்திற்கு மதிப்பளித்து, தனது சகோதரர் ரவிச்சந்திரனுடன் இணைந்து உரிய ஏற்பாடுகளைச் செய்தார். அதன்படி, அழகிரிசாமியின் உடல் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவ மாணவர்களின் கல்விப் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இதற்கான உரிய சான்றிதழ்களையும் மருத்துவக் கல்லூரி
நிர்வாகத்திடம் இருந்து அவர்கள் பெற்றுக்கொண்டனர். ஒரு சிறந்த ஆசிரியராக வாழ்ந்து காட்டியவர், மறைந்த பின்னரும் மருத்துவ உலகிற்குத் தனது உடலையே பாடப்புத்தகமாகத் தந்துவிட்டுச் சென்ற இந்தச் செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் தானம் குறித்த விழிப்புணர்வு பெருகி வரும் இவ்வேளையில், ஒரு கிராமப்புறப் பகுதியில் இருந்து கொண்டு இத்தகைய துணிச்சலான முடிவை எடுத்துச் செயல்படுத்திய அந்த ஆசிரியரின் குடும்பத்தினரைச் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.