தூத்துக்குடியில் “நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்” என்ற புதிய அரசியல் கட்சி கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டு, குறுகிய காலத்திலேயே அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கட்சியின் தலைவராக தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் குமரன் செயல்பட்டு வருகிறார். பொதுச் செயலாளராக அருணா தேவி, மற்றும் பொருளாளராக சிவா முத்துக்குமார் ஆகியோர் பொறுப்பேற்று கட்சியை முன்னெடுத்து வருகின்றனர்.

லஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், டாஸ்மாக் கடைகளை அகற்றுதல், கல்வி வளர்ச்சி, தொழில் மேம்பாடு, விவசாய முன்னேற்றம் மற்றும் நவீன மருத்துவ வசதிகளை அதிகரித்தல் போன்ற மக்கள் நலக் கொள்கைகளை முன்வைத்து இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் “நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்” கட்சியும் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் கட்சித் தலைவர் பொன் குமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகுதியில் அரசியல் சூழல் பரபரப்புடன் காணப்படுகிறது. மேலும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் பொதுச் செயலாளர் அருணா தேவி போட்டியிடுகின்றார்.

அதேபோல், கோவில்பட்டி தொகுதியில் ஜெயசீலன், ஸ்ரீவைகுண்டத்தில் சுடலை மணி, திருச்செந்தூரில் ரத்தின ராஜா, விளாத்திகுளத்தில் ஜெய் கணேஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் தொகுதியில் பிரித்திவி ராஜ் போட்டியிட உள்ளார்.

இந்த அறிவிப்புகள் கட்சித் தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்தலை நோக்கி கட்சி முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது.

மக்கள் நலனை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தக் கட்சி, பல்வேறு தொகுதிகளில் வலுவான போட்டியை உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *