பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர். நவ. 10பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் தகுதியுடைய அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப் பெறுவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 356 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர்.
இன்றைய கூட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ், அரசு மானியத்துடன் ரூ.5,90,624 மதிப்பிலான விசை களை எடுக்கும் கருவிகளையும், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 6 பயனாளிகளுக்கு பெயர் மாற்றம், வீடுகள் மற்றும் கடைகளுக்கு வணிக மற்றும் தற்காலிக, புதிய, மின் இணைப்பிற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்கொழுந்து, மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அசோக்குமார், தாட்கோ பொது மேலாளர் கவியரசு, மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.