அரியலூர், ஏப்ரல் 2-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு என்டிஏ கூட்டணியின் பாமக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் க வைத்தி அவர்கள் கூறியதாவது:
வரவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியின் சார்பில் தன்னை வேட்பாளராக அறிவித்து வாய்ப்பு வழங்கியதற்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி. தினகரன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

மேலும், கடந்த 35 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியில் பணியாற்றி வருவதாகவும், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் பொதுமக்களின் பிரச்சனைகளை அரசிடம் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து பேசும்போது, குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுவது, சாலை வசதிகளை மேம்படுத்துவது, மேலும் 5 ஆண்டுகளில் குடிசை இல்லாத தொகுதியாக மாற்றுவது தனது முக்கிய இலக்குகள் எனக் கூறினார். விவசாயிகளின் நலனுக்காக சோலார் பாசனத் திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திற்கு மன்னர் ராஜேந்திர சோழன் பெயரை சூட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் செயல்படும் மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள் குறித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்துவேன் என்றும் கூறினார்.

மேலும், நிலக்கரி திட்டம் மூலம் மக்களை இடம்பெயர்க்கும் முயற்சிகளை பாமக எதிர்த்து போராடி வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்தார்.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவது முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என்றும், உள்ளூர் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்பு வழங்கும் முயற்சிகளை செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரின் பங்களிப்பு குறித்து பாராட்டிய அவர், தமது வெற்றிக்கு அவர்கள் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், ஊடகத்துறையினருக்கு இலவச வீட்டுமனை வழங்கும் முயற்சியையும் மேற்கொள்வேன் என்று கூறினார்.

இறுதியாக, பொதுமக்களின் ஆதரவை பெற்று அவர்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற உறுதியாக செயல்படுவேன் எனக் கூறி நன்றியுடன் உரையை நிறைவு செய்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *