கோவை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் ஃபைஜி மற்றும் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தமிழ்நாடு தொடர்பாக கட்சியின் சார்பில் 8 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பாஜக இந்து–முஸ்லிம் பிரச்சனைகளை முன்வைத்தே ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாகவும், மக்களின் அடிப்படை பிரச்சனைகளை அக்கட்சி முன்னெடுப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை பாஜக தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், பல்வேறு நடவடிக்கைகளில் அக்கட்சி தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என விமர்சித்த அவர்கள், எஸ்.டி.பி.ஐ. தொடர்ந்து மக்களின் பக்கம் நின்று பாஜகவுக்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்தும் என்றனர். நாடு முழுவதும் மாணவர்கள் பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
சிறுபான்மையினர் நடத்தி வரும் சேவை அமைப்புகளை முடக்கும் நோக்கிலேயே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். CJP கட்சிக்கு தாங்கள் ஆதரவு இல்லை என்றும், ஆனால் அந்த அமைப்பு நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர். CJP போராட்டத்தின் மூலம் பாஜகவுக்கு எதிரான மக்களின் மனநிலை வெளிப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே தமிழகம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தற்போதைய தமிழக அரசின் நீட் எதிர்ப்பு நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்றும் தெரிவித்தனர்.
இஸ்லாமிய நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். கோவையில் சிறு தொழில்களை பாதுகாக்க மூலப்பொருள் வங்கி அமைக்க வேண்டும் என்றும், போதைப்பொருட்களின் புழக்கத்தை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கர்நாடகாவில் உயிரிழந்த தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், கர்நாடக முதலமைச்சரின் பேச்சை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தனர்.
தமிழக வெற்றிக் கழகம் அரசு எடுக்கக்கூடிய நல்ல முயற்சிகளுக்கு எஸ்.டி.பி.ஐ. ஆதரவு அளிக்கும் என தெரிவித்த அவர்கள், மதச்சார்பற்ற கட்சிகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்றும் சுட்டிக்காட்டினர்.
தமிழ்நாடு தொடர்பான 8 தீர்மானங்களை முன்னெடுத்து, மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க எஸ்.டி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொள்ளும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.