புதுச்சேரி காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகியை, செவிலியர் அதிகாரிகள் சங்கத் தலைவர் அமலோற்பவமேரி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பின்போது, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் மக்களுக்கு முழுமையான மருத்துவ சேவை வழங்கும் வகையில், அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறிப்பாக, காலியாக உள்ள செவிலியர் அதிகாரிகள் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டு, புதுச்சேரி மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களுக்கு ‘Sparing Service’ முறையில் அனுப்பப்பட்டுள்ள பணியாளர்களை மீண்டும் முழுமையாக பணியிடமாற்றம் செய்து, அவர்களால் ஏற்படும் காலியிடங்களையும் நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

செவிலியர் அதிகாரிகளின் பணிப்பொறுப்புகள் மற்றும் அவர்களின் தகுதிக்கு ஏற்ப ஊதியக் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்து, உரிய வகையில் ஊதியத்தை உயர்த்த வேண்டும். மேலும், பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாமல் உள்ள உள் பணியிட மாறுதல்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கோரிக்கைகளை கேட்டறிந்த மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி, தனது அதிகார வரம்புக்குள் வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்வதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, அரசு பொது மருத்துவமனை அலுவலகக் கண்காணிப்பாளர் ஹாஜா, சங்க நிர்வாகிகள் விசாலாட்சி, அன்புக்கரசி, மணிகண்டன், வேம்பு, விஜயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *