கடலூர் மாவட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்
சிதம்பரம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் சிதம்பரம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன்ஆய்வு மேற்கொண்டார்.
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் நகர்ப்புற மக்களின் வளர்ச்சிக்காகவும் மேன்மைக்காகவும் ஏராளமான திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். நகர்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்பதற்காக எண்ணற்ற உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 10 ஊரக ஊராட்சிகளுக்குட்பட்ட 36 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டம், அம்ரூத் 2.0 மற்றும் ஜல் ஜீவன் மிஷன் நிதியின் கீழ் செயல்படுத்த நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ.255.64 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் சிதம்பரம் நகராட்சியைச் சேர்ந்த 81,154 மக்களுக்கும், அண்ணாமலைநகர் பேரூராட்சியைச் சேர்ந்த 23,510 மக்களுக்கும், குமராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியங்களை சேர்ந்த 10 ஊராட்சிகளுக்குட்பட்ட 22,902 மக்களுக்கும் பயன்பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு, சிதம்பரம் நகராட்சி பகுதியில் 69.04 கி.மீ நீளத்திற்கு பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டு 4,283 எண்ணம் மற்றும் அண்ணாமலைநகர் பேரூராட்சியில் 22.72 கி.மீ நீளத்திற்கு பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டு 1,497 எண்ணம் வீட்டு இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது. குமராட்சி மற்றும் பரங்கிப்பேட்டையை சேர்ந்த 10 ஊராட்சிகளுக்கான குடிநீர் அந்தந்த ஊராட்சிகளில் அமைய உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும், தற்போதைய நிலையில் 12.73 மில்லியன் லிட்டரும், இடைநிலையில் 14.80 மில்லியன் லிட்டரும் மற்றும் உச்ச நிலையில் 17.17 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படவுள்ளது.
தற்போது தலைமை நீரேற்று நிலையத்தில் மின் இணைப்பு பெறப்பட்டு ஒரு நீர் சேகரிப்பு கிணறு கொண்டு சோதனை ஓட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகள் 87 விழுக்காடுகள் முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு நகராட்சி பகுதிகளுக்கு 135 லிட்டரும், பேரூராட்சி பகுதிகளுக்கு 90 லிட்டரும், ஊரக பகுதிகளுக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 1,27,566 மக்கள் பயன்பெறுவர். மேலும், கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை கூடுதல் பணியாளர்களை கொண்டு விரைவாக மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிதம்பரம் நகராட்சியில் மொத்தம் 136 சாலைகளில் குழாய்கள் பதிக்கப்பட்ட வீடுதோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகிறது. தற்போது வரை 61 சாலைகளில் இப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இச்சாலைகளை பொதுபோக்குவரத்திற்கு இடையூறின்றி சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதுவரை 30 சாலைப் பணிகள் முடிவுற்றுள்ளது. எஞ்சியுள்ள 31 சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் எஞ்சியுள்ள குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளை விரைவாக மேற்கொண்டு, குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டவுடன், சாலை பணிகளையும் பொதுபோக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி மேம்படுத்தி அமைக்கப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிதம்பரம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டம், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.252.82 கோடி மதிப்பீட்டில் 139 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றில் 92 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 47 பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய வீதிகளில் நடைபெற்றுவரும் வடிகால் பணிகள், புறநகர் பேருந்து நிலையம், குளம் தூர்வாருதல், தினசரி காய்கறி சந்தை உள்ளிட்ட அனைத்து திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, அனைத்துப் பணிகளையும் துரிதமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஆய்வின் போது சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் மல்லிகா, நகராட்சி பொறியாளர் சுரேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மாரியப்ப வினோத் ராஜா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் ஜெயந்தி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.