மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பயிலும் மாணவிகள் சிலருக்கு ஆண் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆசிரியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் மீது மதுரை மாநகர் திலகர்திடல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆண் ஆசிரியரை கைது செய்ய கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மதுரை மாநகர் தெற்கு வெளி பகுதியில் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தினர் இணைந்து அப்போது ஆசிரியரை கண்டித்தும், ஆசிரியர் மீது காவல்துறையினர் நடவ டிக்கை எடுக்காததை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கலைந்துசெல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.