திருவாரூர்., ஏப்ரல்.06

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.

திருவாரூர் சட்டமன்ற தொகுதி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன்படி பாஜக சார்பில் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில், பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில துணைத்தலைவர் கோவி.சந்துரு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, பாஜக வேட்பாளர் கோவி. சந்துரு, திருவாரூர் பனகல் சாலையில் உள்ள அதிமுக நகர கழக அலுவலகத்தில் இருந்து, அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக தெற்கு வீதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகமான, கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டனர்.

தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகமான கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வேட்பாளர் மற்றும் அவருடன் நான்கு நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என விதி உள்ளது.

இதற்காக தெற்கு வீதியின் நுழைவாயிலில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து வேட்பாளருடன் 4நபர்களை தவிர, மற்ற கட்சி நிர்வாகிகளை தடுத்து நிறுத்துவது வழக்கம்.

அதன்படி ஊர்வலமாக வந்த பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை காவல்துறையினர் தடுக்க முயன்றும், அதனை பொருட்படுத்தாத தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் காவல்துறையினர் தடுப்புகளையும் மீறி, நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலகமான கோட்டாட்சியர் அலுவலகத்தில் நுழையும் முயன்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அனைவரையும் தடுத்து நிறுத்தி ஐந்து நபர்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலகமாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு உள்ள செல்ல அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் அந்த பகுதி முழுவதுமே பரபரப்பான சூழல் நிலவியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *