கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குடிமேனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட குடிமேனஹள்ளி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. கிராமத்தில் கடந்த மூன்று மாத காலமாக தென்பெண்ணை ஆற்று குடிநீர் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் ஆகிய எந்த குடிநீரும் வழங்கப்படாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி செயலாளர் உறுதியளித்திருந்த நிலையில், தொடர்ந்து குடிநீர் வராத காரணத்தால் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், அகரம் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விபரம் அறிந்து விரைந்து வந்த பாரூர் காவல்துறையினர் கிராம பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளைக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் நகரப் பேருந்து அங்கிருந்து செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டது.