நாமக்கல் மாவட்டம் அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் கதவணை பணிகளை, நாமக்கல், கரூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்று இளம் விவசாயிகள் சங்கத்தினர், கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், அனிச்சம்பாளையம் பகுதியில் இளம் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர், காவிரி ஆற்றின் குறுக்கே நடைபெற்று வரும் கதவணை அமைக்கும் பணிகளை (12.05.2026) பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அச்சங்கத்தின் தலைவர் ஜெ. சௌந்தரராஜன் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டம், அனிச்சம்பாளையம், கரூர் மாவட்டம், நன்செய் புகளூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406.50 கோடி செலவில் கதவணை அமைக்கப்படுகிறது. கதவணை அமைப்பதன் மூலம் 0.8 TMC தண்ணீர் சேமிக்க முடியும். இந்தப் பணியை கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் தேதி மத்திய அமைச்சர் திரு. அமித்ஷா சென்னையில் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கதவணை கட்டும் பணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் தொடங்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து பணிகள் கடந்த சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

காவிரி ஆற்றில் புதியதாக கதவணை அமைக்கும் திட்டத்தின்கீழ் வலதுகரை நன்செய் புகளூர் மற்றும் இடது கரை அனிச்சம்பாளையத்திற்கும் இடையே புதிய கதவணை 1056 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 73 ஷட்டர்கள் அணையின் குறுக்கே அமைக்கப்படவுள்ளது.

கதவணை அமைப்பதன் மூலம் 0.8 TMC தண்ணீர் சேமிக்க முடியும். அதேபோல் 4.4 மீட்டர் உயரம் தண்ணீர் தேக்க முடியும். புதிய கதவணை பணிகள் முடியும்போது வாங்கல் வாய்க்காலின் மூலம் 1,450 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

அதேபோல் நாமக்கல் மாவட்டம், மோகனூர் வாய்க்கால் மூலம் 2,580 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். புதிய கதவணையின் மூலம் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளில் குடிநீர் ஆதாரம் மேம்படுவதோடும், நிலத்தடி நீர் மட்டம் உயரும். புகளூர் காகித ஆலைக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். விவசாயம் சார்ந்த தொழில் மேம்படும். கதவணை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கு சுற்றுலா தளமாக அமைய வாய்ப்புகள் இருப்பதால் அதனை சார்ந்த பொதுமக்களின் பொருளாதாரம் மேம்படும்.

நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள குட்டை, கிணறுகள் கதவணை கட்டி முடிக்கும்போது அதில் உள்ள நீர்மட்டம் மிகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கதவணை கட்டும் பணிகள் 3 ஆண்டுகளில் முடிவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 5 ஆண்டு கடந்தும் இதுவரை பணிகள் நிறைவு பெறவில்லை. ஆமை வேகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே நடைபெறும் கதுவணை கட்டுமானப் பணியை துரிதப்படுத்தி விரைந்து பணியை முடிக்க, தமிழக முதலமைச்சர், பொதுப்பணித் துறை உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெ. சௌந்தரராஜன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், இளம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *