நாகப்பட்டினம்,மே.18-
திட்டச்சேரி – காரைக்கால் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திட்டச்சேரி – காரைக்கால் சாலை திட்டச்சேரி – காரைக்கால் நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். அதேபோல் இருசக்கர வாகனங்கள், வேன்கள், பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் திட்டச்சேரி – காரைக்கால் சாலை எப்போதும் வாகனங்கள் நிறைந்து காணப்படுவது வழக்கம்.
சுற்றித்திரியும் மாடுகள் இந்த சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக ப.கொந்தகை மெயின் ரோடு, இந்திராநகர், அகரக்கொந்தகை, வாழ்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் கூட்டமாக ரோட்டின் நடுவே நிற்கின்றன. இதனால் மாடுகள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் மாடுகள் முட்டி விடுமோ? என்ற அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.