நாகப்பட்டினம்,மே.21-
திருமருகல் அடுத்த பண்டாரவடையில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சேதமடைந்த சாலை
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி மதகடி தெருவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் அன்றாடம் சென்றுவர மதகுடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மேலிருப்பு, சீ யாத்தமங்கை வரையிலான பொதுமக்கள் சென்று வரவும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவர முடியாமல் தவிக்கின்றனர்.
நடவடிக்கை
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.