திருநெல்வேலி மாவட்ட அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன், பொது அறிவு மற்றும் சிந்தனை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், மும்பை விழித்தெழு இயக்கம் சார்பில் அறிவியல் என்சைக்ளோபீடியா உள்ளிட்ட நூல்கள் வழங்கப்பட்டன.
மும்பையில் இருந்து அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, சேரன்மகாதேவியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு நெய்னா முகமது அவர்களுக்கு நான்கு புத்தக பார்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான நூல்கள் குறித்து தொடர்பு கொண்டு ஆலோசித்த பின்னர், இயக்கத்தினரிடம் இருந்த புத்தகங்களும், கவிஞர் புதிய மாதவி மாணவர்களுக்காக பாதுகாத்து வைத்திருந்த நூல்களும் சேர்த்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நூல்கள், சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி இரா. மரகதவல்லி மற்றும் கோபாலசமுத்திரம் சூவன்சாட் உயர்நிலைப் பள்ளி முதல்வர் திரு ஜெயக்குமார் ஆகியோரிடம் வழங்கப்பட்டன.
மேலும், மும்பை விழித்தெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் மதன் லால் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நெய்னா முகமது முன்னிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவியல் & பொது அறிவு ,வரலாறு, பயிற்சி மாதிரி புத்தகங்கள், டிக்ஷனரி, என்சைக்ளோபீடியா Dictionary & Encyclopaedia புத்தகங்கள் நேரடியாக வழங்கப்பட்டன.
இதுகுறித்து இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் என்ற சிறீதர் தமிழன் கூறுகையில், “வாசிப்பு பழக்கமும், பொது அறிவும், சிந்தனை திறனும் இன்றைய காலத்தின் அவசியமாகும். அதனை வளர்க்கும் நோக்கில் தொடர்ந்து பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “முன்னதாக மும்பை கம்பன் உயர்நிலைப் பள்ளிக்கு நூலகம் அமைத்துக் கொடுத்துள்ளோம். வீரவநல்லூர் நூலகத்திற்கும் நூல்கள் வழங்கியுள்ளோம். நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் மும்பை ஆரே காலனி பகுதிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியுள்ளோம். சில மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, உயர்கல்வி வழிகாட்டுதல், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நன்கொடை இல்லாமல் சேர்க்கை பெற உதவி செய்துள்ளோம்,” என்றார்.
அத்துடன், பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தியதுடன், சிலருக்கு தொழில் தொடங்க வழிகாட்டுதலும் வட்டியில்லா கடன் உதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் தற்காப்புக் கலைகள் கற்பித்துவரும் இயக்கம், இனிவரும் காலங்களில் பள்ளி மாணவர்கள் கணிதத்தை பயமின்றி கற்க இலவச ஆன்லைன் கணிதப் பயிற்சியும் வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சமூக மாற்றம் மற்றும் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வமுள்ளவர்களை இணைத்து மேலும் பல நலத்திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்படுவதாகவும் ஸ்ரீதர் என்ற சிறீதர் தமிழன் தெரிவித்துள்ளார்.