தூத்துக்குடி
இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு மக்கள் நல மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் திருமதி அன்னபூர்ணா பிள்ளை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மத்திய அரசுத் துறைகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளமை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வேலைவாய்ப்பு திருவிழாவின் 19-வது கட்ட முகாம் நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ள ரோஜ்கார் மேளா திட்டத்தின் மூலம் இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் மத்திய அரசுப் பணிகளில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரிய சாதனையாகும் என தெரிவித்தார்.
மேலும், ரயில்வே, சுகாதாரம், நிதிச் சேவைகள், உயர்கல்வி உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவது நாட்டின் நிர்வாக திறனை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் L. முருகன் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கியதும் தமிழக இளைஞர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள். 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார் . பிரதமரின் உரையானது இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான மத்திய அரசின் உறுதியை வெளிப்படுத்துவதாக அன்னபூர்ணா பிள்ளை கூறினார்.
இளைஞர்களின் திறமையை மதித்து, அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வழங்கி வரும் பிரதமர் மோடி அவர்களின் நல்லாட்சி இந்தியாவை வளர்ச்சி பாதையில் முன்னேற்றிக் கொண்டிருக்கிறது என்றும், இத்தகைய மக்கள் நல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் பிரதமருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.