நாகப்பட்டினம்,மே.24-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி பாணாசுரன் வழிபட்ட தலமாகவும், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர்களாலும் பாடல் பெற்ற தலமாகவும், அகழ் என்னும் தீர்த்த குளம் நடுவில் அமைந்துள்ள இக்கோவிலில் அப்பர் ஐக்கியமான வரலாறுடைய இந்த அக்னீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரமோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே 30-ந்தேதி வரை நடக்கிறது.
புஷ்ப பல்லக்கில் சாமி வீதியுலா
விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு புஷ்ப பல்லக்கில் சாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் 18-வது குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், ஆதீன இளவரசு அஜபா நடேஸ்வர சாமிகள், பொருளாளர் பரமானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 25-ந்தேதி வசந்தன் விழாவும், 27-ந்தேதி இடப வாகன காட்சி, 29 -ந்தேதி தேரோட்டம் பநிகழ்ச்சியும் நடக்கிறது.