கோவை
தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஜூன் 1ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ள பள்ளிகளை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் என பல்சமய நல்லுறவு இயக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாடு முழுவதும் கோடைக்கால வெப்பம் தீவிரமாக நிலவி வருகிறது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்லும் சூழலில் உடல் உபாதைகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதனால் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்பட உள்ள பள்ளிகளை ஒரு வாரம் கழித்து திறப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்கும் என நம்புகிறோம்.
மேலும், பெற்றோர்கள் குழந்தைகளை கடும் வெயிலில் வெளியே அனுப்பாமல் பாதுகாக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாத வகையில் போதிய தண்ணீர் மற்றும் சத்தான உணவுகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.