தூத்துக்குடி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் கானல் நீராகவே உள்ளது அதனை புதியதாக பொறுப்பேற்று இருக்கும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அவர்கள் நிறைவேற்றுவாரா என்று பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வணிகர் பிரிவு தலைவர் செந்தில் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்

அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி நகரின் நீண்டநாள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கன் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளார்.

அதன்படி, தூத்துக்குடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அனைத்து நோயாளிகளும் முழுமையாக பயன்பெறும் வகையில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், அரசு இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் புதர்கள் அதிகளவில் வளர்ந்து விஷப்பாம்புகள் நடமாடுவதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும், உடனடியாக புதர்களை அகற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அதேபோல், சி வ பள்ளி வளாகத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால், நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இவ்வாறு பொதுமக்கள் மற்றும் மாணவர்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தாலும், அவை இதுவரை எந்தவித நடவடிக்கையும் இன்றி கிணற்றில் போடபட்ட கல் போல கிடப்பில் இருந்தது

தற்போது புதிய மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீநாத் அவர்கள், இந்த நீண்டநாள் கோரிக்கைகளை முன்னுரிமையுடன் எடுத்துக்கொண்டு விரைவாக நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக விவிடி சிக்னல் பகுதியில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் விரைவாக மேம்பாலம் அமைப்பது மக்கள் நீண்ட நாள் கனவாக உள்ளது.

அதேபோல் நகரின் முக்கிய சாலைகள் மற்றும் வணிக பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி நகர மையத்தில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையம் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வாக நகர புறநகர் பகுதியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

நகரில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

மேலும் தூத்துக்குடியில் மழைக்காலங்களில் நீர் தேக்கம், பாதாள சாக்கடை பணிகளில் உள்ள குறைபாடுகள், சேதமடைந்த சாலைகள், தெருவிளக்கு வசதி இல்லாமை, துறைமுகப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு, இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானங்கள் நவீனமயமாக்குதல் போன்ற பல்வேறு அடிப்படை பிரச்சினைகளும் நீண்ட காலமாக நிலவி வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் தொழில் வளர்ச்சிக்கான மிகப்பெரிய வாய்ப்புகள் கொண்ட பகுதி என்பதால் புதிய தொழிற்சாலைகள் மற்றும் பெரிய நிறுவனங்களை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக கடல்சார் தொழில், உணவு பதப்படுத்தும் தொழில், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள், ஐ.டி. மற்றும் சிறு தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட வேண்டும்.
புதிய நிறுவனங்கள் தொடங்கப்படும் போது தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

உள்ளூர் இளைஞர்களின் திறனை மேம்படுத்த தொழில்பயிற்சி மையங்களும் உருவாக்கப்பட வேண்டும்.
தற்போது பதவியேற்றுள்ள அமைச்சர் ஸ்ரீநாத் மக்கள் எதிர்பார்க்கும் இந்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்தி தூத்துக்குடி வளர்ச்சிக்கான புதிய மாற்றத்தை உருவாக்குவாரா என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *