தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா, நெய்வேலி தென்பாதி, நருநாக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் சிவசத்யா (26) இவர் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் தற்காலிக நடத்துநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி சனிக்கிழமை மாலை, 3:40 மணியளவில் A-6 அரசு நகரப் பேருந்தில் பணியில் இருந்தார். அப்போது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே பெண் ஒருவர் பேருந்தில் ஏற முயன்றார். அப்போது பேருந்துக்கு பின்னால் தொடர்ந்து வேறு பேருந்துகள் வந்ததால், வண்டியை நிறுத்த முடியவில்லை. பின்னாலேயே பேராவூரணி வரும் அரசுப் பேருந்து வருகிறது. அதில் ஏறி வாருங்கள் எனச் சொல்லி விட்டு, பேரு‌ந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.


பின்னர் பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 5:10 மணியளவில் பட்டுக்கோட்டை புறப்பட்ட போது, பேரு‌ந்தை நிறுத்தச் சொன்ன பெண்ணின் உறவினர்களான சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஊமத்தநாடு பகுதியைச் சேர்ந்த 2 பேர் நடத்துநர் சிவசத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நடத்துநர் சிவசத்யா பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தாக்குதலில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் , பேராவூரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *