ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரனுக்கு “உயிர் சூழல் 2026” விருது
இயற்கை பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் சூழல் மேம்பாட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மற்றும் “உயிரின் சுவாசம்” அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான டாக்டர் க. மாதேஸ்வரன் அவர்களுக்கு “உயிர் சூழல் 2026” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஜனனி அமைப்பின் சார்பில் பல்லடம் வனாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மாதேஸ்வரன் மருத்துவ சேவையைத் தாண்டி இயற்கை பாதுகாப்பிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
அவரது “உயிரின் சுவாசம்” அறக்கட்டளை மூலம் 100 மாதங்களில் 10 கோடி மரக்கன்றுகளை நடவு செய்யும் இலக்குடன் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இதுவரை ஒரு கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் நிழல் மரங்கள், பூ மரங்கள், பழமரங்கள், டிம்பர் மரங்கள் மற்றும் ஸ்தல மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
மேலும், 2018 ஆம் ஆண்டு முதல் கோவை ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இலவச மரக்கன்றுகள் மற்றும் விதைகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இயற்கை மற்றும் மரங்களின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த பற்றுடன், எதிர்கால தலைமுறைகளுக்கான பல்லுயிர் செல்வத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் டாக்டர் க. மாதேஸ்வரன் அவர்களின் சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவரது துணைவியார் திருமதி ஸ்ரீகலா மாதேஸ்வரன் கலந்து கொண்டார்.
இந்த விருதை யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன தலைவர் தேவராஜன், வனம் இந்தியா அறக்கட்டளையின் சுந்தர்ராஜன் மற்றும் ஜனனி ரீஜென் அமைப்பின் உஷா தேவி வெங்கடாசலம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
“ஒரு மருத்துவர் உயிர்களை காப்பார்… ஒரு மரம் உலகையே காப்பாற்றும்…” என்ற உயர்ந்த எண்ணத்துடன் மருத்துவ சேவையையும், இயற்கை பாதுகாப்பையும் தனது வாழ்க்கைப் பணியாக மாற்றியுள்ள டாக்டர் க. மாதேஸ்வரன் அவர்களுக்கு தொழிலதிபர்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.