கோவை,
தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.50,000 வரையிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பல் சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில இணைச் செயலாளர் கே. சாதிக் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“மழைப்பொழிவு மாற்றம், உற்பத்திச் செலவு உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிரமங்களை எதிர்கொண்டு வரும் விவசாயிகளுக்கு, தமிழக அரசின் இந்த ரூ.50,000 வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு மிகப்பெரிய நிவாரணமாகவும், புதிய நம்பிக்கையையும் அளிப்பதாகவும் உள்ளது.
நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் துயரைப் போக்கும் வகையில், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. சாதி, மத பேதமின்றி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் இந்த மக்கள் நலத் திட்டத்தை அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு எங்களது இயக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு மேற்கொள்ளும் மக்கள் நலத் திட்டங்களுக்கு பல்சமய நல்லுறவு இயக்கம் தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி ஜெ. முகமது ரஃபி அவர்களின் வழிகாட்டுதலின்படி வெளியிடப்பட்டுள்ளது.