உலகப் புகழ்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில் மொட்டை கோபுரம் எதிரில் ஏ ஆர் ஆர் சாலையை நோக்கி கண்காணிப்பு பணிக்காக கும்பகோணம் மாநகர காவல்துறையினர் பொருத்திய சிசிடிவி கேமராவை மறைத்து அமைக்கப்பட்ட தவெக கட்சி நிர்வாகியின் பிறந்த நாள் பேனரால் சர்ச்சை.

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர். வினோத் ரவியின் நெருங்கிய நண்பரும், தஞ்சை கிழக்கு மாவட்ட பொருளாளர் மற்றும் முன்னாள் திமுக நிர்வாகி சாத்தூர் ரமேஷ் செட்டியாரின் மகனான ஆர். விஜய் சந்திரன் என்பவருக்கு மே 27 ஆம் தேதி புதன்கிழமை பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அமைச்சர் வினோத் ரவியின் நெருங்கிய நண்பர் என்பதால் மகாமக குளம் அருகில் உள்ள, ராயாஸ் கிராண்ட் மஹாலில் மிகப்பெரிய விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தஞ்சை கிழக்கு மாவட்ட தவெக நிர்வாகிகளால் அமைக்கப்பட்ட பேனர் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆதி கும்பேஸ்வரர் கோவில் மொட்டை கோபுரம் எதிரே காவல்துறையினரால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, இந்த பேனர் அமைப்பின் காரணமாக மறைக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்களால் கண்டறியப்பட்டுள்ளது. மர கட்டமைப்புடன் அமைக்கப்பட்ட பேனர், கேமராவின் பார்வையை முழுமையாக மறைக்கும் வகையில் இருப்பதால், அந்தச் சாலையில் காவல்துறையின் கண்காணிப்பு செயல்திறன் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவில் பகுதி என்பதால் தினசரி பெருமளவு பக்தர்கள் மற்றும் வாகனங்கள் திரளும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பாதிக்கப்படுவது குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் சிசிடிவி கேமரா போன்ற முக்கிய உபகரணங்களை மறைக்கும் வகையில் பேனர் அமைப்பது விதிமுறைக்கு முரணானது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், சர்ச்சையில் சிக்கியுள்ள விஜய் சந்திரனின் பிறந்தநாள் பேனர் தொடர்பாக கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் எம். காந்திராஜ் மற்றும் மாநகர காவல்துறை உடனடி ஆய்வு மேற்கொண்டு, விதிமுறை மீறலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், சர்ச்சைக்குரிய பேனரை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிகழ்வு, கட்சி ஒழுங்கு மற்றும் பொது ஒழுக்கம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் நிர்வாகிகளை கட்டுப்படுத்துவதில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு கும்பகோணம் தொகுதி மக்கள் இடையே எழுந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *