கோவையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் 26-வது பட்டமளிப்பு விழா பி.எஸ்.ஜி.ஐ.எம்.எஸ்.ஆர். அரங்கில் நடைபெற்றது..
பி.எஸ்.ஜி சன்ஸ் சாரிட்டீஸ் அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,பி.எஸ்.ஜி.நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயதீபா அனைவரையும் வரவேற்று பேசினார்..
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக . புது தில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநரும், தேசிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவ ஆணைய மசோதாவின் தலைவருமான டாக்டர் பிம்லா கபூர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
கவுரவ விருந்தினராக மணிப்பால் செவிலியர் கல்லூரியின் பேராசிரியரும் முதல்வருமான டாக்டர் ஜூடித் ஏஞ்சலிட்டா நோரோன்ஹா கலந்து கொண்டார் இவ்விழாவில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில், 97 இளங்கலை மற்றும் 15 முதுகலை பட்டதாரிகள் தங்களது பட்டச்சான்றிதழ்களைப் பெற்றனர்.2021-ஆம் ஆண்டு படிப்பு பிரிவில் சிறந்த மாணவராக டொனால்ட் ஜீன் டி. தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றார்.மேலும், பாடத்தில் சிறந்த மாணவர், சிறந்த பயிற்சி செவிலியர், சிறந்த ஆராய்ச்சியாளர், மாணவர் செவிலியர் சங்கத்தின் சிறந்த உறுப்பினர், சிறந்த என்.எஸ்.எஸ். தன்னார்வலர், சிறந்த ஒய்.ஆர்.சி. தன்னார்வலர், சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தேசிய சுகாதார இயக்கத்தின் தேசிய மதிப்பீட்டாளரான கவிதா விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வு முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து, கல்லூரியின் வளர்ச்சிக்கும் பாரம்பரியத்திற்கும் பங்களிக்கும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது..