
மரணப் புகையில் கரையும் மனித உயிர்: உலக புகையிலை எதிர்ப்பு தினத்திற்காக கோயம்புத்தூர் கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் அதிர வைக்கும் சிகரெட் குறுஞ்சிற்ப விழிப்புணர்வு!
உலகம் முழுவதும் நாளை (மே 31) ‘உலக சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. புகையிலையின் தீமைகளைப் பற்றிப் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோயம்புத்தூர் குனியமுத்தூரைச் சேர்ந்த பிரபல குறுஞ்சிற்பக் கலைஞர் யு.எம்.டி. ராஜா (UMT Raja) அவர்கள், பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் வகையிலான ஒரு அசத்தலான தங்கக் குறுஞ்சிற்பத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
புகைப்பழக்கத்தால் ஒரு குடும்பமே எப்படிச் சீரழிகிறது என்பதை மிக நுட்பமாகத் தனது குறுஞ்சிற்பத்தின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார் கலைஞர் ராஜா. ஒரு நிஜ சிகரெட்டின் மீது, தங்கத்திலான ஒரு அழகான சிறிய குடும்பத்தைச் செதுக்கியுள்ளார். அதில், ஒரு தகப்பனிடம் அவனது மனைவியும் குழந்தையும், “புகை பிடிக்காதே… புகை உன்னை புதைத்து விடும்!” என்று கண்ணீருடன் மன்றாடுவது போல் அந்தச் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், அந்த சிகரெட்டைப் புகைக்கும் நபர், மரணத்தின் விளிம்பில்… புகையின் பிடியில் சிக்கி, அதற்கு அடிமையாகித் தவிப்பது போன்ற காட்சி பார்ப்போரைக் கண்கலங்க வைக்கிறது.
இந்த விழிப்புணர்வுச் சிற்பத்தின் கீழே, “உலக புகையிலை எதிர்ப்பு தினம்” என்ற வாசகம் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கும் கீழே, புகைப்பழக்கத்தால் தன் வாழ்நாளைத் தானே சுருக்கிக்கொண்டு, புகையால் தன்னை மாய்த்துக்கொண்ட ஒரு மனிதனின் எலும்புக்கூடு கிடப்பது போல் மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
”புகை உன்னை புகைத்து விடும், புகைக்காதே!”என்ற ஒற்றை வரியை உலகிற்கு உரக்கச் சொல்லும் நோக்கில் இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலைஞர் யு.எம்.டி. ராஜா கூறுகையில், “புகைப்பழக்கம் என்பது தனிமனிதனை மட்டுமல்ல, அவனை நம்பியிருக்கும் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும், அவர்களின் எதிர்காலத்தையும் சேர்த்தே புதைத்து விடுகிறது. இந்தத் தங்கக் குறுஞ்சிற்பத்தின் மூலம், புகைபிடிப்பவர்கள் மனமாற்றம் அடைந்து, தங்களின் குடும்பத்திற்காகவாவது அந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்ற சமூக நோக்கோடு இதை நான் வடிவமைத்துள்ளேன்” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் சமூக விழிப்புணர்வுக்காகப் பல்வேறு புதுமையான கலைப்படைப்புகளை உருவாக்கி வரும் யு.எம்.டி. ராஜாவின் இந்த உலக புகையிலை ஒழிப்பு தினக் குறுஞ்சிற்பம், தற்போது சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.