முத்தமிழறிஞரின் பிறந்தநாளுக்கு பேனா மையால் உருவான பிரம்மாண்ட ஓவியம்:கோவை கலைஞர் யு.எம்.டி. ராஜாவின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு!

​கோவை:
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நவீன தமிழகத்தின் சிற்பியுமான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் ஜூன் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை முன்னிட்டு, கலைஞருக்கு முற்றிலும் மாறுபட்ட, நெகிழ்ச்சியான முறையில் கோவையைச் சேர்ந்த பிரபல நுண்ணியக் கலைஞர் (Micro Artist) குனியமுத்தூர் யு.எம்.டி. ராஜா அவர்கள் தனது கலைவண்ணத்தால் சிறப்பு செய்துள்ளார்.


​கலைஞர் அவர்கள் எழுத்துலகில் தடம் பதிக்காத துறைகளே இல்லை. பத்திரிகைத்துறை, அரசியல், கலைத்துறை, நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, திரைக்கதை என தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் தமிழ் மொழிக்காகவும், தமிழக மக்களுக்காகவும் பேனா பிடித்து எழுதியவர் அவர். “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…” என்று அவர் தீட்டிய வரிகள் இன்றும் தமிழகத்தின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.


ஓவியத்தின் தனிச்சிறப்பு:
​அவர் தன் வாழ்நாளில் தினந்தோறும் அதிகம் பயன்படுத்திய, நேசித்த ‘பேனா மை’ (Ink) மற்றும் அந்த மையினை நிரப்பப் பயன்படும் ‘இன்பில்லர்’ (Ink Filler) ஆகியவற்றை மட்டுமே முதன்மையாகக் கொண்டு, கலைஞர் அவர்களின் முழு உருவ ஓவியத்தை அசாத்திய திறமையுடன் வரைந்துள்ளார் யு.எம்.டி. ராஜா.​”ஒரு தலைவனின் பேனா முனையில் இருந்துதான் ஒரு மாநிலத்தின் தலையெழுத்து மாற்றியமைக்கப்பட்டது. அந்தப் பேனாவின் மையைக் கொண்டே அவருக்கு ஒரு கலைவடிவம் தருவதுதான் நான் அவருக்குச் செலுத்தும் ஆகச்சிறந்த நன்றிக்கடன்” என்று கலைஞர் யு.எம்.டி. ராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


​கலைஞரின் எழுத்து ஆளுமையையும், அரசியல் விஸ்வரூபத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் இந்த ‘பேனா மை ஓவியம்’ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பார்ப்போரைக் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *