நாகப்பட்டினம்,ஜூன்.2-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹஜ்ரத் மெய்தீன் கனி மஸ்தான் ஒலியுல்லாஹ் அவர்களின் 100ஆம் ஆண்டு கந்தூரி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கடந்த மே மாதம் 26 ஆம் தேதி அன்று முறைப்படி கொடியேற்றத்துடன் 100 ஆம் ஆண்டு கந்தூரி விழா வெகு விமரிசையாகத் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு மற்றும் புனித சந்தனம் பூசும் வைபவம் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. சந்தனக்கூடு ஊர்வலத்தின் போது, வழிநெடுகிலும் திரண்டிருந்த இசுலாமியப் பெருமக்கள் மலர்களைத் தூவி, பக்திப் பெருக்குடன் துஆ ஓதி வழிபாடு செய்தனர்.
இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டியினரும், வடகரை ஜமாத்தார்களும் செய்திருந்தனர். இந்த 100 ஆம் ஆண்டு பெருவிழாவில் மதநல்லிணக்கதிற்கு எடுத்துக்காட்டாக சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மும்மத பொதுமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.