தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
“நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்”: தாராபுரத்தில் மு.பெ. சாமிநாதன் பேட்டி!
கலைஞரின் 103-ஆவது பிறந்தநாள்: ஆதரவற்ற மாணவிகள் மற்றும் முதியோர்களுக்கு அறுசுவை உணவு வழங்கல்!
திருப்பூர் மாவட்டம்
தாராபுரத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஆதரவற்ற மாணவிகள் விடுதி மற்றும் முதியோர் இல்லங்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர் இல. பத்மநாபன் தலைமை தாங்கினார். நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம், நகரமன்றத் தலைவர் பாப்பு கண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் பிரபாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பெ. சாமிநாதன், முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட மருத்துவ அணி டாக்டர் இந்திராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, சி.எஸ்.ஐ. லிஸ்டர் ஆதரவற்ற மாணவிகள் விடுதி மற்றும் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி விடுதிவ் மாணவிகளுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் அறுசுவை மதிய உணவு வழங்கினர். இதனைத் தொடர்ந்து, அரசு உதவிபெறும் ‘ரியல்’ முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கும் சைவ உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது, “எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் கலைஞரின் புகழும் கழகத்தின் புகழும் நிலைத்து நிற்க வேண்டும்; மக்கள் நலன் கருதி திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் காலம் உள்ளவரை நீடிக்க வேண்டும்” என மாணவிகள் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். மேலும், தாராபுரம் நகர இளைஞரணித் துணை அமைப்பாளர் சரத்குமார் சார்பில், ஏழை சலவைத் தொழிலாளி குடும்பம் ஒன்றிற்கு சலவை வண்டியையும் முன்னாள் அமைச்சர்கள் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.பெ. சாமிநாதன் கூறியதாவது:
“திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஐந்தாண்டு கால நல்லாட்சியில், மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் பல்வேறுவ் நலத்திட்டங்கள் அரசாணைகளாக்கப்பட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டன. இந்த மண்ணும் நாடும் உள்ளவரை கலைஞரின் புகழையும், கழக ஆட்சியின் சாதனைகளையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
திருச்சியில் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய பேச்சு, மக்கள் மத்தியில் வெறுப்பையே ஏற்படுத்தியுள்ளது. அவரது அறியாமையையும் அரசியல் நாகரிகமற்ற பேச்சையும் கண்டு, ‘நாமும் அறியாமல் வாக்களித்து விட்டோமே’ என்ற எண்ணம் மக்கள் மனதில் தற்போதே உருவாகத் தொடங்கிவிட்டது. திமுக தலைவர் மக்களின் மனம் அறிந்து எவ்வாறு சிறப்பான ஆட்சி நடத்தினார் என்பதை மக்கள் இப்போது உணர்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், ‘நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்’ என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகர அவைத் தலைவர் கதிரவன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பழகன், ஆனந்தி, மாணவியர் விடுதி தாளாளர்கள் ரத்னா பாய், சுகன்யா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், வார்டு கிளைக் கழக நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.